இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாரதீ? (இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினக் கவிதை)


தாயின் மணிக்கொடி ஏற்றி,
தாழ்ந்து பணியச் சொன்னாய்!
கொடியேற்றிவிட்டு
மிட்டாய் தருகிறார்கள்!
மிட்டாய் தந்து பிள்ளை பிடிப்பதில்
எங்கள் தலைவர்கள் கில்லாடிகள்!

“பொழுதெலாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ? –நாங்கள்- சாகவோ?
என்றாயே பாரதி?
ஒரு நாடு
கொள்ளையடித்ததற்கே நீ
குமுறினாய்!
இப்போது
உலக நாடுகளின் கொள்ளைக்காடாய்
உனது இந்தியா..!
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாரதீ?

அழுதுகொண்டு இருப்போமா நாங்கள்
ஆண்பிள்ளைகள் அல்லமோ? –உயிர்- வெல்லமோ?”
என்றாய்,
ஆனால் நாங்கள் அழவில்லையே பாரதீ?
சிரிக்கிறோம்!
தாயின் நோயறியாக் குழந்தையாக..
சிரிப்பாய்ச் சிரிக்கிறோம்!
  
“பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்”
என்றாயே பாரதீ?
நாங்கள் எழுபதாண்டுகளில்
பள்ளித் தலமனைத்தும் வாணிகம் செய்கிறோம்!
கடன் வாங்கிக் கணக்குப் பழகினோம்!
கடன் வாங்கியே வாழப் பழகினோம்!

“பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்” என்றாய்,
நாங்கள் கல்வி பயின்ற பேடிகளானோம்!
வாயைத் திறந்து சும்மா கிளியே
வந்தே மாதரம் என்கிறோம்!

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றாய்!
மன்னர்கள் ஒரு நாள் கப்பம் பெறுவதால்,
ஐந்துவருடம் கறந்துவிடுகிறார்கள் மந்திரிகள்!

தேசத்தைக் காத்தல் செய்
என்றாயே பாரதீ!
தேசம் காப்பது பற்றி
மன்றங்களில் எப்படிப் பேசுவோம் தெரியுமா?
ஆனால், தவணையில் விற்பது பற்றித்
தனியாரிடம் மட்டுமே பேசுவோம்!

சோதிடம் தனை இகழ்
என்றாய் பாரதீ!
சோதிடப் புத்தகங்கள்தான் இப்போது
விற்பனையில் சாதனை படைக்கின்றன
தெரியுமா பாரதீ?

தையலை உயர்வு செய்
என்றாயே பாரதீ!
சாலையில் பிடித்து இழுத்தும்,
சம்மதிக்கா விட்டால் அமிலம் ஊற்றியும்,
பலர்சேர்ந்து பாதகம் செய்தும்
வானுக்கே தையல்களை
உயர்த்த்த்தி விடுகிறோம் தெரியுமா?

“உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் –வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்”
என்றாயே பாரதி!
சற்றே எழுத்தை மாற்றி,
சாதனை படைக்கிறோம் தெரியுமா?
உழவுக்கும் தொழிலுக்கும்
நிந்தனை செய்து, – வீணில்
உண்டுகளித் திருப்போரை வந்தனை செய்கிறோம்!

சாதிகள் இல்லையடி பாப்பா
என்றாயல்லவா பாரதீ!
பாப்பாக்களிடம் மட்டும்தான்
இப்போது சாதிகள் இல்லை!
உன் சொல்லைக் காப்பாற்றிவிட்டோம்!

அது என்ன...?
“வாயில் காத்து நிற்போன் வீட்டை
     வைத்திழத்தல் போலும்,
கோயில் பூசை செய்வோன் சிலையைக்
     கொண்டு விற்றல் போலும்
ஆயிரங்கள் ஆன  நீதி 
     அவை உணர்ந்த தருமன்
தேசம் வைத்து இழந்தான் -சீச்சீ
     சிறியர் செய்கை செய்தான்” 
என்றாயல்லவா?
இன்னும் நாங்கள் 
இருக்கிறோம்...
யாருக்கு அடிமையென்று தெரியாமலே!

வயிற்றுக்கான காய்கறியை
தூசியில் வைத்தும்,
காலுக்கான செருப்புகளை
ஏசியில் வைத்தும் மட்டுமல்ல,
தியாகிகளை மறக்கச் செய்தும்
துரோகிகளைச் சிறக்கச் செய்தும்
மனுஷ்களை தடியால் அடித்தும்
நடிகனுக்குப் பாலாபிஷேகம் செய்தும்,
எத்தனை கோடி இன்பம் தெரியுமா பாரதீ?

ஆனாலும் நாங்கள் இந்தியரே 
என்பதை நிலைநாட்டுவோம்!
ஆதார் அட்டை விரைவில் கிடைக்குமாம்!
ஆதாரமில்லாத வாழ்க்கை என்று
ஆருமினிச் சொல்ல முடியாது போ!

பாரத் மாதாகீ ஜே!

தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி
தேசிய கீதத்தில் முடியும் நிகழ்ச்சிகள்

எப்படியோ முடிகிறது 
எங்கள் வாழ்க்கை!
முடியாமல் தொடர்கிறது
என் கவிதை...

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாரதீ?
நாடு வாழ்க!
நாளைய சுதந்திரம் வாழ்க!
(14-8-2016)

(படத்திற்கு நன்றி -
எட்டயபுரம் பாரதி மகளிர் தொழில்நுட்பக்கல்லூரி)

14 கருத்துகள்:

  1. அருமை அண்ணா..ஆதங்கமும் வேதனையும் வெளிப்படுத்தும் பதிவு..

    பதிலளிநீக்கு
  2. பாரதியையே
    சால்வையாக போர்த்திக்கொண்டு
    குமுறியிருக்கிறீர்கள்.
    அருமை.

    ==============================ருத்ரா இ.பரமசிவன்

    பதிலளிநீக்கு
  3. பாரதியின் வரிகளோடு இன்றைய நிலையை விளக்கி அருமையான கவிதை அய்யா!
    சுதந்திரதின வாழ்த்துக்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. பொங்கும் உணர்வலைகளை - தங்கள் வரிகள்
    எங்கும் மின்னக் கண்டேன் - நாளை
    நல்ல விடியலை எதிர்பார்த்துக் காத்திருப்போம்
    நம்மாளுங்க உள்ளம் மாறும் வரை...

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியரின் சுதந்திரதின கவிதைக்கு நன்றி. இனி ஒரு சுதந்திரம் - நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  6. இணைந்து ஆதங்கப் படுகிறோம் ஐயா! சுதந்திரம் பெற்றதற்காக பெருமை கொள்ள முடியவில்லை.மக்கள் முதல் அதிகாரிகள் வரை யாருக்காவது அடிமைகளாகவே இருக்கிறார்கள்.நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரோடுதான் வாழ்ந்து தொலைக்க வேண்டி இருக்கிறது. இல்லை இல்லை வாழ்க்கையையே தொலைக்க வேண்டி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை . உண்மை .என்ன செய்வது ? அவர்களுக்குதான் சமூகத்தில் மரியாதை , அங்கீகாரம் எல்லாம் .குழந்தைகளுக்கு பாரதியார் பாடல்களை சொல்லி கொடுக்கவே பயமாக உள்ளது .நாம் அனுபவித்த சிறுமைகளை அவமானங்களை அவர்களாவது அனுபவிக்காமல் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தட்டுமே என்று தோன்றுகிறது. பார்ப்போம்

      நீக்கு
  7. நாம புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தானா அண்ணா ..இதற்கு முடிவே வராதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு வரும் முடிவு வரும் என்று எதிர்பார்த்து ஏங்கி ஏங்கியே நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது .

      நீக்கு
  8. நல்ல வேளை, உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் இக்கடடான நிலை பாரதிக்கு வரவில்லை அய்யா.
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற கனவோடு போய்விட்டான்.

    பதிலளிநீக்கு