ஆர்.கே.நகர் தொகுதியில் கல்வியாளர் வசந்திதேவி வெற்றிபெற வேண்டும்!


சென்னை இராதாகிருஷ்ணன் (ஆர்.கே.) நகரில் 
சட்டமன்ற வேட்பாளராகக் களமிறங்கும் பிரபல கல்வியாளர் வசந்திதேவி வெற்றிபெற வேண்டும்.

இன்று மதியம் மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக-தமாகா கட்சிகளில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவுனர் தலைவர் தொல். திருமாவளவன் இதனைப் பத்திரிகையாளர் மன்றத்தில் அறிவித்தார்.

இப்படி ஒரு மிகவும் தகுதிவாய்ந்த வேட்பாளரைத் தேடி அழைத்துவந்து, ஆதரவு தந்து, “பொதுவேட்பாளராக அனைவரும் ஏற்று, வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட திருமா மிகுந்த பாராட்டுக்குரியவர்.

வசந்திதேவியம்மா, தமிழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான – சிங்காரவேலருடன் இணைந்து பொதுவுடைமை இயக்கத்தைத் தமிழகத்தில் விதைத்த – சக்கரைச் செட்டியார் அவர்களின் பெயர்த்தி என்பதும், முன்னாள் மத்திய மாநில அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்களின் மருமகள் என்பதும் மட்டுமே காரணமல்ல… நல்ல கல்விக்கான, சமச்சீர்க் கல்விக்கான தமிழ் நாட்டுக் கல்வியாளர்களில் மிகவும் முக்கியமான இடம் வகிப்பவர்.

மிகப்பெரிய கல்வியாளரும் இந்தியாவின் முதல்குடிமகன் எனும் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பெயரில் உள்ள இராதாகிருஷ்ணன் நகரையே ஆர்.கே.நகர் என்று அர்த்தமில்லாமல் சொல்லும் நாம் அதற்குப் பிராயச் சித்தமாக கல்வியாளர் வசந்திதேவி அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

வே.வசந்திதேவி 1938ஆம் ஆண்டில் பிறந்தவர். சொந்த ஊர் திண்டுக்கல். வரலாற்றில் முதுகலைப் பட்டமும்  பிஎச்.டி. பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாகப் பணியாற்றினார். தற்போது மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

கும்பகோணம் கல்லூரியில் முதல்வராக அவர்கள் பணியாற்றியபோது அறிவியல் இயக்க நிகழ்ச்சியின்போது சந்தித்திருக்கிறேன். பின்னர் அவர்கள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியபோதும், பணி ஓய்வுபெற்றபின்னும் ஓய்ந்து உட்கார்ந்துவிடாமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து, நல்லகல்வி தமிழ்நாட்டு மாணவர்க்குக் கிடைக்கவேண்டும் என்று பாடுபட்டு வருபவர்.
வசந்திதேவி -
பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி இணைந்து நடத்திய நல்ல கல்விக்கான உரையாடல்,
ஒரு சிறு நூலாக வந்திருக்கிறது.
இவர் வெற்றி பெற அ.தி.மு.க. தவிர்த்த மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவைத் தந்தால் தமிழ்நாட்டில் நல்ல அரசியல் தழைக்க வழிபிறக்கும். இதனை மற்ற கட்சிகள் யோசித்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது இவரைப் பற்றி அறிய இவரது நேர்காணல் ஒன்று போதும் -

இந்தியக் கல்வியமைப்பு, மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான அமைப்பு!

(“புத்தகம் பேசுது” மாத இதழில் வெளிவந்த -வே. வசந்திதேவி அவர்களின் நேர்காணல்) -- சந்திப்பு : ஜி.செல்வா
அவருடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து….
நாங்கள் சுவாசித்த காற்றிலேயே Radicalism இருந்தது
அது மார்க்சியம் என்றோ, இடதுசாரி சித்தாந்தம் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஜனநாயகம், சமத்துவம், ஏழ்மை ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மானிட விடுதலை இவற்றிலெல்லாம் பெரும் நம்பிக்கை இருந்தது
நேருவின் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதை இருந்தது. அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு சோசலிசத்தின்பால் ஈடுபாடு அணி சேராக் கொள்கை உருவாக்கம் போன்றவை மிக முக்கியமானது.

உலகத்தில் முதன்முதலாக ஜனநாயக முறைப்படி அதாவது வாக்குச்சாவடி மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட .எம்.எஸ். தலைமையிலான கேரள அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்து கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பங்குகொண்டேன்.

வியட்நாம் யுத்தத்தின்போது அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தினசரி பேப்பரில் அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருப்பேன்
என்னைக் கடவுள் நம்பிக்கையிலிருந்து நாத்திகத்திற்கு முதலில் உந்தித்தள்ளியது விவேகானந்தரின்  ஞானயோகம் என்பது விசித்திரம். அதற்குப்பின்தான் பொருள்முதல்வாதமும்  மாக்சியமும் படிக்க ஆரம்பித்தேன்
76 வயது நிரம்பிய வசந்திதேவியின் இளமைக்கால உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய விசயங்கள் தான் இவை. ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புக்கு எதிரான போராட்டம், கல்வி, மனிதஉரிமை, பெண்ணுரிமை எனப் பல தளங்களில் தனது காத்திரமான கருத்துகளை செயல்பாடுகளை முன்வைத்து எதிர்கால சமுதாயத்தினரிடம் நம்பிக்கை கொண்டு செயல்படும் வசந்திதேவியை சந்தித்தபோது உற்சாகமாகப் பேசினார்:

திராவிடக் கட்சிகள் கல்வியில் செய்த சாதனைகள் என்ன என்று கேட்டால்,   “1967ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் பெருமளவு பள்ளிகள் நிறுவுதல், நூற்றுக்கணக்கான ஆசிரியர் நியமனம் எல்லாவற்றிற்கும் மேலாக, மதிய உணவுத் திட்டம்  ஆகியவை தொடங்கிவிட்டன. அந்த அடித்தளத்தின் மேல் திராவிடக் கட்சிகளின் காலத்தில் கல்வி வளர்ச்சி தொடர்ந்தது. ஆனால், பெரும் வேதனை தரத்தக்க விஷயம் தனியார் மயமும், வர்த்தகமயமும், ஆங்கில வழிக்கல்வியும் இந்த ஆட்சிகளில்தான் வேகமாக வளர்ந்தன.

இந்தியை விரட்டுவதாகச் சொல்லி ஆங்கிலத்தைத் திணித்து விட்டார்கள். இருமொழிக் கொள்கை தமிழைத்தான் விரட்டிவிட்டது. உலகம் முழுவதும் தாய்மொழிக் கல்விதான் சமூகவளர்ச்சிக்கு அடிப்படை என நிரூபிக்கப்பட்டுவரும் வேளையில், தமிழகத்தில் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு இருக்கின்றது.  ஆங்கிலத்தின் இன்றைய தேவையை மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தைக் கல்வி மொழியாக மாற்றி இருப்பதுதான் விபரீத விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது
கல்வியைத் தாய்மொழி வழியாகத்தான் கற்க வேண்டும். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக, உலகெங்கும் கற்பதைப் போல்எங்கள் தலைமுறையில் அனைவரும் கற்றதைப் போலகற்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வி குழந்தைகளின்மேல் ஏவப்படும் வன்முறை. ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள், ஒன்றும் புரியாத குழந்தைகள். கல்வியின் ஆன்மாவே சிதைக்கப்பட்டு, கல்வி என்பதே கேலிக்கூத்தாகி விட்டது. வசதி பெற்றவர்களும், கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளும்தான் இதில் அனுகூலம் அடைகிறார்கள்.

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மாணவர்கள், அங்கு சென்ற 6 மாதத்தில் ரஷ்யமொழியைக் கற்கமுடிகிறது. சீனாவில் இன்று ஆங்கில மொழியைக் கற்பது அதிகமாகி இருக்கிறது என்பது உண்மைதான். அவர்கள் அடிப்படைக் கல்வியை சீன மொழியில் கற்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகத்தான் கற்கிறார்கள்; கல்வி மொழி சீன மொழிதான். ஒரு மொழியாக ஆங்கிலத்தைத் கற்றுக்கொள்கிறார்களே தவிர, ஆங்கிலம் மூலம்தான் கல்வி என்பது சீனாவில் இல்லை.

டாஸ்மாக் கடைக்கு எதிராக வெகுமக்கள் போராடுவது போல் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்காகப் போராட முன்வராதது ஏன் அதற்கான சாத்தியங்களை எவ்வாறு உருவாக்குவது என்கிற நமது கேள்விகளை உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டபோதுகல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிரான மக்களின் உக்கிரமான போராட்டங்கள் அவசியம்தான். அதேவேளையில் போராடிப் பெற்ற உரிமைகளை, சட்டங்களை அரசுகளை அமல்படுத்த வைப்பதில் கவனம் தேவைப்படுகிறதுஎன்கிறார் வசந்திதேவி.
பொதுப்பள்ளியும், அருகமைப் பள்ளியும் கொண்டு, அனைவருக்கும் இலவசமாக, அரசு நிதியில் மட்டுமே நடைபெறும், சமமான தரமுடைய தாய்மொழி வழியான கல்விதான் வேண்டும் என்பதில் உறுதியாக நிற்க வேண்டும். ஆனால், அது இறுதி லட்சியம். அதனை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட நிலையில், தனியார் பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியுமே வேண்டும் என்று அடித்தட்டு மக்களும் தவிக்கும் காலத்தில் இந்த மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது? என்று கேட்டோம். அதற்கு அவர்...
படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும். அரசியல் உறுதி இருந்தால் வரும் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இன்றைய அரசுகளுக்கு, வசதி படைத்தோரின் கைப்பாவைகளான அரசுகளுக்கு, எங்கிருந்து இத்தகைய அரசியல் உறுதி பிறக்கும்? எந்தப் பெரிய மாற்றமும் பல கட்டங்களில்தான் சாத்தியமாகும்.

கல்வி உரிமைச்சட்டம் பல குறைபாடுகளுடன்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தின் மூலமும் நம்மால் சில நிர்பந்தங்களை அரசுக்கும், தனியார் கல்வி முதலாளிகளுக்கும் தரமுடியும். இச்சட்டத்தின்படி தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றனவா என்பதை அரசும், சமூக அமைப்புகளும் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். ஒரு பள்ளி எத்தகைய வசதிகளோடு, எப்படிப்பட்ட கட்டுமானப் பணிகளுடன், முழுத்தகுதியுடைய ஆசிரியர்களுடன் இருக்க வேண்டுமென RTE சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்தின்படி பார்த்தாலே தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடவேண்டிய சூழல் உருவாகும். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின்படி இல்லாத, அடிப்படைக் கட்டுமானப் பணிகள் இல்லாத பள்ளிகளை மூடவேண்டும். மக்கள் அமைப்புகள் நலக்குழுக்கள், வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்க அமைப்புகள் தங்கள் பகுதியிலுள்ள தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் RTE சட்டத்தின்படி இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

அடுத்து, அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று சட்டம் தேவை. (இந்த நேர்காணல் அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு முன் நடந்தது) அரசுப் பள்ளிகள் இன்று புறக்கணிக்கப்படுவதன் காரணம், அவை ஏழைகளுக்கு மட்டுமே, குரலற்றவர்களுக்கு மட்டுமே, என்ற நிலை ஏற்பட்டதுதான். அதில் அமைச்சர்கள் முதற்கொண்டு, செல்வாக்குப் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளும் படித்தால், அவை வியத்தகு மாற்றங்களைக் காணும். மிகச் சிறந்த பள்ளிகளாக உயரும்.வேண்டிய நிதி ஒதுக்கீடும் செய்யப்படும். அடுத்து, 3 கீலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வரும் குழந்தைகளை எந்தப் பள்ளியும் சேர்க்க இயலாது என்று விதிமுறை கொண்டு வர வேண்டும். அப்பொழுது அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்படும். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதும் தேவை. இப்படி படிப்படியாகத்தான் இன்றைய அவல நிலையை மாற்ற முடியும். Quantitative changes, மூலமாகத்தான் qualitative changes கொண்டுவர முடியும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகத் தொடர்ந்து இருமுறை தான் தேர்வு செய்யப்பட்டதும், ஓய்வுக்குப் பின்னர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதும் தனக்கே ஆச்சரியமாக இருப்பதாக சிரித்துக்கொண்டே சொல்கிறார். ஆச்சரியமாகத்தான் உள்ளது! தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் இந்தத் தேர்வுகள் நடந்துள்ளது.

சரி பதவிக்கு வந்த பிறகு நீங்கள் செய்த பணிகளில் எதை மிக முக்கியமானதாகக் கருதுகிறீர்கள், மகிழ்ச்சியாக நினைக்கிறீர்கள்? எனக் கேட்டபோது பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டங்களில் தான் ஏற்படுத்திய மாற்றங்கள், இளங்கலையில் மூன்று மாவட்டத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பயனடையும் வண்ணம் செய்யப்பட்ட மாற்றங்கள்  மிக முக்கியமானதாகப் படுவதாக நினைவுகூர்கிறார். இதுகுறித்து தாமும் எழுத்தாளர் சுந்தரராமசாமியும் நிகழ்த்திய உரையாடலில் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காண்பித்தார். ‘தமிழகத்தில் கல்விஎன்ற தலைப்பில் காலச்சுவடு இதை வெளியிட்டுள்ளது.

கல்வி குறித்த எனது  மிகப்பெரிய ஆதங்கம் கல்விநிலையங்களை சமுதாயத்துடன் பிணைக்கும் உயிர்த்தலைகளின்றி அந்நியப்பட்டுக் கிடப்பது. இன்றைய கல்வியின் பல கேடுகளுக்கு இது காரணம். ஆகவே அனைத்து இளங்கலை மாணவர்களும்  கட்டாயமாகக் கற்க வேண்டிய சமூக விழுமியப் பாடங்கள்  (Social Value Education) என்று பகுதி 3 ல் அறிமுகம் செய்தேன். இதில் 9 பாடங்கள் இருந்தன. “இந்தியாவில் பெண்ணின் நிலை”, “கிராமிய இந்தியா”, “இந்திய சுதந்திரப் போராட்டம்” “சுதந்திரத்திற்குப் பின் இந்தியப் பொருளாதாரம்” “சுற்றுச்சூழல் கல்வி”  “மதச்சார்பின்மை” “காந்தியச் சிந்தனை”  “அறிவியலின் வரலாறு” “நுகர்வோர் பாதுகாப்புஎன பாடங்கள் இருந்தன.

இதில் சிலவற்றை ஒவ்வொரு கல்லூரியிலும் தேர்ந்தெடுத்து அவற்றில் ஒன்றை ஒவ்வொரு இளங்கலை மாணவரும் இரண்டாம் ஆண்டில் அவசியம் தேர்வு செய்யவேண்டும். முதலாண்டில் அனைத்து மாணவரும் பொதுஅறிவு (General Knowleges) கட்டாயம் கற்க வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளில் Part IV என்ற ஒன்றும் கட்டாயமாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவரும் NSS, NCC விளையாட்டு நுண்கலை ஏதேனும் அறிவியல் இயக்கம் ஒன்றில் 15மணிநேரம் ஈடுபட வேண்டும். மதிப்பெண்கள் உண்டு. இவற்றில் பல பாடங்களுக்கு பாடத்திட்டம் உருவாக்கவே பெரும் பாடுபட வேண்டியிருந்தது. என்னுடைய  Planning Board ல் புகழ்பெற்ற அறிஞர் பலரை சேர்த்திருந்தேன்; சர்வபள்ளி கோபால், சி.டி.குரியன், எம்.எஸ்.சுவாமிநாதன், எம்.அனந்தகிருஷ்ணன், என்.ராம் போன்றோர் பாடத்திட்டம் வகுப்பதில் துணைபுரிந்தனர்.
முக்கியமாக செய்தது இம்மாற்றங்கள் மேலிருந்து திணித்தவையாக  இல்லாமல் ஆசிரியர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றியவையாக இருக்க வேண்டும் என்பதற்காக  பல்கலைக்கழக கல்லூரிகளை 10 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் அனைத்து ஆசிரியர்களையும் நான் சந்தித்து அரைநாள் மாற்றங்களை விளக்கி அவர்களது தயக்கங்களைப் போக்கி ஒப்புதலைப் பெற்றேன்.
தனது மாற்றங்களுக்கு சக பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்ததைவிட, அவர்களின் சங்க அமைப்பான MUTA-வுடன் பெற்ற ஆலோசனைகளே பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது என்கிறார்.

“1992-
ல் பாபர் மசூதி இடிப்பு, நம் நாட்டின் மதச்சார்பின்மைக்குப் பெரும் கேள்விக்குறியாகிப் போனது. மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்ற கருத்துக்கள் நாடு முழுதும் விவாதமாக்கப்பட்டன. 1996ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மதச்சார்பின்மை (Secularism) என்ற தலைப்பில் பாடத்திட்டத்தினைக் கொண்டு வந்தோம்.ஆனால் அன்றைய சூழலில் இந்தியாவில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் அத்தகைய தலைப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. எங்கள் பல்கலைக்கழகத்தில் தான் பாடத்திட்டத்திற்காக குறிப்புகளை வரலாற்று அறிஞர் சர்வபள்ளி கோபால் உதவியுடன் முதன்முதலில் உருவாக்கினோம்.

அறிவியல் வரலாறுபாடத்திட்டத்தினை எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதிக்கொடுத்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு பேரா..மாடசாமி பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெற்ற மாற்றங்கள் மிக முக்கியமானவை. வேறு எந்தப் பல்கைலைக்கழகத்திலும் அப்படி நடந்திருக்குமா என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தது  .மாடசாமி அவர்களின் பங்களிப்பு என மகிழ்ச்சி பொங்க நினைவுகூர்கிறார்.

இவ்வாறு தாங்கள் உருவாக்கிய மாற்றங்கள் முழுமையாக வெற்றியடைந்ததா எனக் கேட்டால்அப்படிச் சொல்ல முடியாது. உதாரணத்திற்கு Women Studies என்ற பாடத்திட்டத்தை எந்த ஆண்கள் கல்லூரியிலும் பாடமாக எடுக்கவில்லை. பெண்கள் கல்லூரியில்தான் அதைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தனர். அவ்வாறு உருவாக்கிய பாடங்களையும், முழுமையாகப் போதிக்காமல் தேர்வு எழுதுவதற்கான நோட்ஸ்களைஉருவாக்கும் கலாச்சாரத்தை உருவாக்கியது வேதனை. மேலும் அமைப்பை உருவாக்கி விட்டோம், அதில் ஆன்மா இல்லையே என்ற சந்தேகம் எனக்கு அன்றே இருந்தது என்கிறார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கோடிக்கணக்கில் முதல் போட்டு லாபம் பெறும் சூழல் தமிழகத்தில் உருவாகிவிட்டதே  என நமது கவலையைப் பகிர்ந்து கொண்டபோதுஆசிரியர் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நான் துணைவேந்தராக இருந்தபோது எனக்கும் அமைச்சர்களிடமிருந்து நிர்பந்தம் வந்தது. அவர்கள் சிபாரிசு செய்வோர்க்கு பேராசிரியர் வேலை கொடுக்கவேண்டுமென்று என்னை நிர்பந்தித்தனர். நான் பணியவில்லை. அவ்வாறு பேசுபவர்களிடம் ஒன்றைச் சொல்லிவிடுவேன். நீங்கள் சொல்பவரைவிட திறமை குறைவான, தகுதிக் குறைவாக உள்ளவர்களுக்கு கட்டாயம் வேலை கிடைக்காது. பல்கலைக்கழக விதிமுறைகளின்படிதான் தேர்வு இருக்குமென்று.
ஒரு கட்டத்தில் இந்த அம்மாவிடம் பேசினால் முடியலையே என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதற்கு மிக உதவியாக இருந்தது ஆசிரியர் தேர்வுக்காக கவர்னர் Nominee யாக ஓய்வுபெற்ற நீதியரசர் சிங்காரவேலர் எனது வேண்டுகோளின் பேரில் நியமிக்கப்பட்டது! மிக நேர்மையான மனிதர். AC Room வேண்டாம் என்பார். பஸ்ஸில்தான் வருவார். இவரைப்போன்ற நேர்மையான மனிதர்களும், வலுவான ஆசிரியர் அமைப்புகளும் உதவியாக இருந்தன. நான் மட்டுமல்ல அக்காலத்தில் பல துணைவேந்தர்களும் அப்படி இருந்தனர்.               
 பேரா.எம்.அனந்தகிருஷ்ணன் போன்றோர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதும், பாராட்டத்தக்கதும் ஆகும். தனியார் கல்வி முதலாளிகள் கொடுத்த நிர்பந்தம் பல. அதில் ஒன்று பல்கலைக்கழகம் ஒதுக்கும் இடங்களைவிட கூடுதலாக மாணவர்களை சேர்த்துவிடுவார்கள். மிகத்தேவையான  Infrastructure ஆசிரியர்கள் இல்லாமல் பணத்திற்காக மாணவர்களை அந்த எண்ணிக்கையில் சேர்த்ததை, தேர்வு வரும்போதுதான் சொல்வார்கள். பல்கலைக்கழகம் தேர்வு எழுத அனுமதிக்க மறுக்கும்போது, மாணவர்கள் மூலமாக நீதிமன்றத்துக்கு செல்வார்கள். மாணவர்களின் நலனை முன்னிட்டு நீதிமன்றமும் தேர்வு எழுத அனுமதி வழங்குமாறு உத்தரவிடும்.

மாணவர்களைப் பகடைக்காயாக வைத்து தனியார் கல்லூரிகள் செய்யும் அட்டூழியத்தை முடிவுகட்டத் திட்டமிட்டோம். அப்போது  வழக்கறிஞராக   இருந்த  சந்துரு அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி  கல்லூரிகளுக்குத் தொடர்ந்து Inspection commission அனுப்பி உண்மைநிலை Expert Report தயாரித்தோம். மாணவர்களின் எண்ணிக்கை, செயல்பாடு குறித்து கேள்வி கேட்டு கடிதம் அனுப்புவோம். அவர்கள் எந்த பதிலும் சொல்லமாட்டார்கள். தேர்வு நேரத்தில் அவர்கள் நீதிமன்றத்துக்கு வழக்கம் போலச் சென்றார்கள். நாங்கள் பல்கலைக்கழகத் தரப்பில் எடுத்த முயற்சிகளை நீதிமன்றத்தில் முன்வைத்து, தனியார் கல்லூரிகளின் வியாபாரத் தனத்தினை அம்பலப்படுத்தினோம். அந்த ஆண்டு மட்டும் மாணவர்கள் நலனை முன்னிட்டு தேர்வு எழுத அனுமதித்தோம்.
அடுத்த ஆண்டிலிருந்து அத்தகைய மோசடிகள் நடைபெறுவது நின்றுவிட்டது.
கல்வி வியாபாரமயமாக்கல், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து மையப்படுத்துதல், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனுமதிப்பு போன்ற கொள்கைகளில் காங்கிரசுக்கும், பா...வுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. ஆனால் பா... ஆட்சியில் திட்டமிட்டு கல்வி காவிமயமாக வகுப்புவாதமாக மாற்றப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட விழுமியங்களை அரசியல் சாசன விழுமியங்களை சிதைத்து வருகிறார்கள்என்று குறிப்பிடும் வசந்திதேவி தற்போது இந்திய உயர்கல்வி எதிர்நோக்க இருக்கும் புதிய சிக்கலை சுட்டிக்காட்டுகிறார்.
 “இந்திய அரசு உலக வர்த்தக மையத்தில் காட்ஸ் (GATS) ஒப்பந்தத்தில் (“சேவைத்துறையில் வர்த்தகம் செய்வதற்கான பொது உடன்படிக்கை”) கையெழுத்து இட உள்ளது. இவ்வாறு செய்தால் உலக வர்த்தக மையத்தில் உறுப்பினராக உள்ள 160 நாடுகளிலிருந்து எந்தக் கல்வி நிலையமும் இந்தியாவில் எங்கும் தங்களது கல்வி நிலையங்களைத் திறக்கமுடியும். அவர்களை அரசு நிர்ணயிக்கிற கட்டணத்தைத்தான் வசூலிக்கவேண்டும் என்று சொல்லமுடியாது. ஆனால் நம்நாட்டு கல்விநிலையங்களுக்கு எத்தகைய சலுகைகளை அரசு வழங்குகிறதோ அதை வெளிநாட்டுக் கல்வி நிலையங்களுக்கும் கொடுக்கவேண்டும்.”

கல்வியில் இத்தகைய மோசமான ஒப்பந்தங்களை எதிர்த்து அண்மையில் சென்னையில் ஒரு பேரணி நடைபெற்றது. பெரும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் வெடித்துக் கிளம்பவேண்டும். இதற்குக் கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயங்களை, அது நம் சமூகத்தில், எதிர்கால இந்தியாவில் எத்தகைய கேடுகளை உருவாக்கும்என்பதை மக்கள் மத்தியில் விரிவான அளவில் பிரச்சாரம் செய்யவேண்டும். இடதுசாரி மாணவர் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் இதில் முன்னணியில் இருக்கவேண்டும்என்றார்.
பா... தலைமையிலான அரசுகளின் செயல்பாடுகள் குறித்துப் பேச ஆரம்பித்தோம்.
 “RSS-பா... சக்திகள் மிக வேகமாக இந்திய சமூகத்தில் ஊடுருவிக் கொண்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு Strategic intellectual class என்பதை உருவாக்குகிறார்கள். தங்களுக்குத் தேவையான கருத்துகளை மிக சாமர்த்தியமாக சமூகத்தில் விதைக்க முற்படுகிறார்கள். மக்களது எதிர்ப்பு இயக்கங்களைப் பிளவுபடுத்துகிறார்கள். சில அமைப்புகள் தற்போது தமிழில் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 80 சத இடஒதுக்கீடு செய்யவேண்டும் என்று போராடுகிறார்கள்.

தமிழகத்தில் இடஒதுக்கீடு என்பது பெரிய கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஆட்களை வேலைக்கு எடுப்பது இல்லை. மறுபுறம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது இல்லை. இடம் இருக்கிற இடத்தில் ஒதுக்கீடு இல்லை. ஒதுக்கீடு இருக்கிற இடத்தில் இடம் இல்லை.”
இதன் தொடர்ச்சியாகக் கல்வித்துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வின் மிக முக்கியமான அம்சத்தை எடுத்துகாட்டுகிறார் வசந்திதேவி.
இன்றைக்கு சுமார் 99 சதவிகிதத்தினர் பள்ளிக்கூடத்திற்கு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன மாதிரியான கல்வி வழங்கப்படுகிறது. அனைத்து வகுப்பினருக்கும் சமமான கல்வி கொடுக்கப்படுவது இல்லை. சமதளத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இப்போது உயர்கல்வியில் 12 முதல் 17 சதம் மாணவர்கள் படிப்பதாக அரசு சொல்கிறது. இது மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக்குறைவு. பல நாடுகளில் 40 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர். சீனாவில் 60 சதத்திற்கு மேல். சரி இதிலும் சாதி வாரியாக எத்தனை சதவிகிதம் என்று பார்த்தோம். ST-7%, SC-11%, OBC – 27%, OC – 48%, முஸ்லிம் 9% கல்வித்துறையில் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதற்கு இந்த விபரங்களே சான்று. சுரண்டலில் நம்பிக்கை கொண்ட நாடுகளில் கூட சமச்சீர் கல்வி உள்ளது.

டாக்டர் அம்பேத்கர்ஜாதி ஒழிப்புநூலில் குறிப்பிட்டதுபோல்இந்திய சமூகத்தில் இழப்பதற்கு ஏதோ இருக்கிறதுஒரு சாதிக்காரன் இன்னொரு சாதிக்காரனை ஒடுக்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறான். தன்னை ஒருவர் ஒடுக்குகிறார் என்பதைத் தாண்டி தனக்கு கீழே ஒருவன் ஒடுக்கப்படுகிறான் என்பதில் பெருமிதம் அடைகிறான். என்னைப் பொறுத்தவரை தலித் பெண்கள்தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் முன்னணி புரட்சிப்படையாக வேண்டும்.”

இன்றைய நவீன தாராளமயமாக்கல் கொள்கை, மிக நுட்பமாக மக்களைத் தங்களின் அடையாளங்கள் வழி பிளவுபடுத்துகிறதே! இதை எதிர்த்து ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களைக் கட்டமைப்பதுதானே இன்றைய தேவை? எனக் கேட்டோம். “ஆம் உண்மைதான். ஆனால் இங்கு ஒன்றுபடுதலுக்கான சாத்தியத்தை தடுத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள உயர்சாதிக்காரர்களைப்போல தந்திரக்காரர்கள் உலகத்தில் எவரும் இல்லை என்பதை, பல யுத்திகளின் மூலம் தந்திரங்கள் மூலம் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். முக்கியமாக  உயர் பொறுப்புகள் அனைத்திலும் தங்களது ஆதிக்கத்தைப் பிடித்து வைத்துக் கொள்வது.

இதை எதிர்ப்பதென்பது மிக நீண்டகாலப் பணி. இது தொடர்ந்து செய்யப்பட வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் தன்மை, சாதியத்தின் வீரியம், எதனால் அது தொடர்ந்து இயங்குகிறது என உணர்ந்து விவாதங்கள் உருப்பெற வேண்டும். சிறு சிறு குழுக்களாக மாணவர்கள் இளைஞர்கள் உட்கார்ந்து படிக்கவேண்டும். படித்ததை, விவாதிப்பது எனத் தொடரவேண்டும். சாதி ஒழிப்புக்கு எதிரான இயக்கங்கள் மிக வலுவாகக் கட்டமைக்கப்பட வேண்டும். ஒரு பக்கத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதுஎன்றார் நம்பிக்கையுடன்.
எதிர்காலத்தின்   மீது எந்த நம்பிக்கையை வைத்து நகர்கிறீர்கள்? என முத்தாய்ப்பாகக் கேட்டோம்.
முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனம் முற்றி வருகிறது. இதற்கு எதிரான போராட்டங்களும் வெடித்துக் கிளம்புகின்றன. லத்தீன் அமெரிக்காவில் Pink Tide இளஞ்சிவப்பு வெள்ளம்பரவி வருகிறது. அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் போராட்டம், ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்கள். அதில் சமீபத்தில் கிரிஸ் நாட்டில் நடைபெற்றப் போராட்டங்கள் என வரிசையாக நினைவுகூர்ந்த மார்க்ஸ் சொன்னதுபோலமுற்றிய முதலாளித்துவ சமூகத்தில்தான் புரட்சி எழும் என்பது நிரூபணம் ஆகப்போகிறதோ?” – என்று புன்னகையுடன் முடித்தார். நாமும் நடந்தால் நல்லதுதானே எனக் கூறி விடைபெற்றோம்.
இவர் வெறும் கல்வியாளர் மட்டுமல்ல, நம் தமிழ்ச்சமூகம் பற்றிய தெளிவான பார்வையும், நம் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றியும் சிந்திப்பவர் என்பதைத் தெரிந்து, மற்ற -அதிமுக தவிர்த்த - கட்சிகள் எல்லாம் வசந்திதேவியை ஆதரித்தால் நல்ல கல்வியும், நல்ல சமூகத்திற்கான முயற்சி வெற்றிபெற வாய்ப்பும் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்.
ஆமா...நீங்க என்ன நினைக்கிறீங்க?
------------------------------------------------------------------------------- 

11 கருத்துகள்:

  1. உங்களை வழிமொழிகிறேன் அண்ணா. டாக்டர் திருமிகு.வசந்திதேவியைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிகத்தெளிவாக கல்வியாளர் முனைவர் வசந்திதேவி அவர்களைப் பற்றி அறியத் தந்துள்ளமைக்கு நன்றி.
    அவர்களைப் போன்ற கல்வியாளர்களும் சமூக சிந்தனையாளர்களும் ஆட்சிக்கு வந்தால் மனிதவளம் மேம்படும். சமூகமாற்றம் நடக்கும். நடக்க வேண்டுமென்பதே நம்போன்றோரின் எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பதிவின் மூலமே அவரை இன்னும் அதிகமாக அறிய முடிந்தது. மக்கள் சிந்தித்து வாக்களித்தால் நன்றாக இருக்கும். ஆர்.கே.நகரில் பணம் விளையாடும் என்பது மட்டும் இப்போதைக்கு நிச்சயமான உண்மை. அதனை மீறி வெற்றி காண்பது பெரிய காரியம். பார்க்கலாம்! நல்ல வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நமது ஆசை. நல்ல விழிப்புணர்வு கட்டுரை.
    பகிர்ந்ததற்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  4. அறியாத ஒருவரை அறிந்து கொண்டோம் நண்பரே ...

    பதிலளிநீக்கு
  5. தகுதியான வேட்பாளர்தான் ஆதரவு கிடைத்தால் நன்று
    நீதியரசர் சிங்காரவேலு நேர்மை பற்றி கூறியுள்ளார்.
    தற்போது தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுதலைவராக உள்ளவர்தானே? அவராக இருப்பின் நான் கேள்விப் பட்டது வேறு.

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு நல்ல திறமைசாலி என்றால் ஏன் இந்த தொகுதியை தருகிரார்கள். உண்மையில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் கூட்டனியிலேயே வாக்கு அதிகாமாக இருக்கும் தொகுதியை தானே வழங்கி இருக்க வேண்டும். அனைத்துமே விளம்பர அரசியல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமான கேள்வி.ஆனால் அவர்களின் நோக்கத்தை
      சந்தேகிப்பதற்கு பதில் இப்படி யோசிக்கலாமே?
      சுகவனம் என்பவரை வைத்து J வை காலி செய்ய முடியுமென்றால் இவரை வைத்து தோற்கடிக்கலாம் என்றும்,தற்போதைய சூழ்நிலை அதற்க்கு உகந்தது
      என்றும் கருதியிருக்கலாம்.
      ஆனால் ஒன்று.காமராஜரையே தோற்கடித்த தரித்திர
      கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாம்.அதற்க்கான
      விலையை தான் தற்போது கொடுத்து வருகிறோம்.

      நீக்கு
  7. டாக்டர் வசந்திதேவி அவர்களைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டேன். இவரைப் போன்றவர்கள் வெற்றி பெற்றால் தமிழ்நாடு உருப்படும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவரைப் பற்றியும் இவர் சாதனைகள் பற்றியும் அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  8. பேரா.வசத்தி தேவி அவர்கள் பொதுத் தளங்களில் கல்வி முன்னேற்றத்திற்காகப் போராடியிருக்கிறார்.சட்டமன்றத்தில் நுழைந்தால் உருப்படியான ஒரு உறுப்பினர் சட்டமன்றத்திற்கு கிடைப்பார்.ஜெயலலிதா தோற்பது ஒரு புறமிருக்க பொருத்தமான உறுப்பினர் கிடைப்பது தமிழக மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  9. டாக்டர் வசந்திதேவி அவர்களைப் பற்றி பல செய்திகள் அறிந்துகொண்டோம். அவர்கள் வெற்றி பெற்றால் ஏற்படும்
    மற்றம் + முன்னேற்றம்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல தகுதியுள்ள வேட்பாளர். ஆதரவு கிடைத்தால் நல்லதே. உங்கள் மூலம் வசந்தி தேவி குறித்த விரிவான தகவல்கள் அறிந்து கொண்டோம்...

    பதிலளிநீக்கு