உச்சநீதி மன்றத்தின் அதிர்ச்சித் தீர்ப்பு - கெயில் எரிவாயுக் குழாய் பிரச்சினை என்ன?



உச்சநீதி மன்றமே ஏமாற்றினால்...?
இராமாயணத்தில் ஒரு கதை சொல்வார்கள்-

ஒருமுறை, ஓடையில் குளிக்கச் சென்ற ராமன், தனது வில்லை ஓடைக்கரையில் குத்தி நிறுத்திவிட்டுக் குளிக்கப் போனானாம். குளித்து முடித்து வந்து பார்த்தால், வில்லைக் குத்தியிருந்த மண்ணில் ஒரு தேவை குத்துப் பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததாம். பதறிப் போன ராமன், “அடப் பாவித் தேரையே! இப்படிக் குத்துப் பட்டுக் கிடக்கிறாயே! குத்தும்போதே சொல்லியிருக்கக் கூடாதா?“ என்று வருத்தத்தோடு தேரையிடம் கேட்டானாம். அதற்குத் தேரை சொன்னதாம்? “வேறு யாராவது குத்தியிருந்தால் ராமா! ராமா!ன்னு உன்னை அழைத்து முறையிட்டிருப்பேன், நீயே குத்தும்போது யாரிடம் போய் நான் முறையிடுவேன் ராமா?என்று அழுததாம்.

ராமன் ஒன்றும் தேரை நம்பிய அளவிற்கு நேர்மையானவன் கிடையாது என்பதை சம்பூகன் கதையை அறிந்தவர் அறிவார்கள்தான்.
ஆனால், இன்றைய இந்தியாவில் “திக்கற்றவர்க்குத் துணையாக நம்பிக்கையின் மிச்ச சொச்சமாக“ உள்ள ஒரு சில ஒளிப்புள்ளிகளில் உச்ச நீதிமன்றமும் ஒன்று. அதுவும் பலநேரம் தவறான தீர்ப்புகளைத் தந்து, குழப்பியதும், திருத்திக் கொண்டதும் உண்டு. எனினும் இன்னும் முற்றிலும் நம்பிக்கையை இழக்காத ஒரு சில நம்பிக்கைகளில் உச்ச நீதிமன்றம் இருக்கிறதென்றே நானும் நம்புகிறேன்.
ஆனால்...
இப்போது இந்த மத்திய அரசின் கெயில் நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய போராட்டம், தமிழக மக்களின் மாநில அரசின் கோரிக்கை அனைத்தையும் அலட்சியப் படுத்தி வந்த தீர்ப்பு பற்றிய விவரம் –

தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க எந்த தடையும் கிடையாது என்று கூறிய நீதிபதிகள், சந்தை நிலவரப்படி விவசாயிகளுக்கு 40 சதவீதம் இழப்பீடு தரவும் உத்தரவிட்டுள்ளனர்.

பாருங்கள், விவசாயிகளை அநியாய அரசியல்வாதிகள்தான் ஏமாற்று கின்றார்கள் என்றால், இந்த உச்சநீதி மன்றமுமா ஏமாற்ற வேண்டும்? 200விழுக்காடு இழப்பீடு கொடுத்தாலும் ஏற்காத விவசாயிகளிடம், வெறும் 40விழுக்காடு கொடுத்து எடுத்துக் கொள்ள உத்தரவாம்!

இதுதொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் எளிதில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருவிற்கு, குழாய் மூலம் எரிவாயு அனுப்ப கெயில் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. 

கேரளாவிலிருந்து எரிவாயு கர்நாடகதிற்குப் போகிறது. இதைக் காட்டு வழியில் மலைகளைக் குடைந்து அனுப்பினால் சற்றே செலவு அதிகமாகலாம் ஆனால், அது அந்த இரண்டு மாநிலங்கள் இடையே முடிந்து விட வாய்ப்புள்ளது, இதில் தொடர்பில்லாத தமிழக விவசாயிகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இவர்கள் இளிச்சவாயர்களா? இல்லை தமிழ்நாடே அப்படித்தானா?

இந்த எரிவாயு குழாய் தமிழகத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர் நாமக்கல் சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அவற்றில் உள்ள கிராமங்கள் வழியாக செல்ல உள்ளது. (மேல்படம்)

இதிலும் முக்கியமாக ஓசூர்,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,நாமக்கல், திருப்பூர், கோவை என முக்கியமான நகரங்களை உள்ளடக்கிய கிராமங்களில் வாழ்வோர் கதி என்னவாகும்?

இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனவும், அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கை மற்றும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. 

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தால், விவசாயம் பாதிக்கப்படும். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், குழாய் பதிக்கலாம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவை ஏற்க மறுத்த, கெயில் இந்தியா நிறுவனம், தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதற்கு, அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கெயில் நிறுவனம் தெரிவித்திருந்தது.  

இப்போது உச்சநீதி மன்றமே 40விழுக்காடு நிவாரணம் தந்தால் போதுமென்று ஆணையிட்டுவிட்டது! விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்து, அதில் பயணம் செய்யப் பாதைபோட நினைக்கும் இந்த்த் தீர்ப்பை என்னென்று சொல்வது? இது அநியாயம் என்பது ஏன் உணரப்படவில்லை?

எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் கெயில் நிறுவனம் தமிழக விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கவும் அனுமதி அளித்தனர்.
மேல்முறையீடு -
இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக, கெயில் நிறுவனம், எரிவாயு குழாய் பதிப்பதற்கு தடை விதிப்பதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இடைக்காலத்தடை  -
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2014 ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இதனிடையே இவ்வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்தது. கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து கெயில் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் அனுமதி -
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகம் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல கெயில் நிறுவனத்துக்கு இன்று அனுமதி வழங்கி உள்ளது. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு எந்தஒரு தடையும் கிடையாது என்று கூறி உள்ள உச்சநீதிமன்றம், தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு 40 சதவிதம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. எரிவாயு குழாய் பதிக்கும் பாதையை மாற்றுவதற்கு தமிழக அரசுக்கு எந்தஒரு உரிமையும் கிடையாது என்றும் கூறியுள்ளது.  

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது உ.நீ.மன்றம்! ஆனால் தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை நாமும் சொல்ல வேண்டிய அவலநிலையில் இருப்பதை என்னென்று சொல்ல?

தமிழக அரசு மனு தள்ளுபடி -
கெயில் நிறுவனத்திற்கான திட்டம் வரையறுக்கப்பட்டபோதே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறதா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் கெயில் நிறுவன திட்டத்திற்கு அனுமதி வழங்கிஉள்ள உச்சநீதிமன்றம், எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களுக்கு நன்றி - http://tamil.oneindia.com
படங்களுக்கு நன்றிகூகுளார்.
பின்குறிப்பு- இப்பதிவில் முதலில் உதாரணத்திற்குத் தரப்பட்டுள்ள ராமாயணக் கதை மற்றும் நீலவண்ணத்தில் இடம்பெற்ற கருத்துகள் முழுவதுமாக எனது கருத்துகள். மற்றவை தொகுக்கப்பட்ட செய்திகள்.
------------------------------------------------- 

7 கருத்துகள்:

  1. அநியாயம் அண்ணா....தமிழகத்தின் நலம் நாடும் உணர்வுபூர்வமான தலைமை இல்லாததன் விளைவு....அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. தமிழ் நாடே தீப்பற்றி எரியும் என்று சொல்லி போராட்டத்தில் குதிப்பார்கள் .அது உண்மையாகிவிடும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. change.org மூலம் தமிழர் இணைந்து போராடினால் பலன் கிடைக்குமா அண்ணா ?

    பதிலளிநீக்கு
  4. சார்

    ஜல்லிக்கட்டு வேண்டும் என்றார்கள். நீதி மன்றம் ஏற்கவில்லை. தடை விதித்தார்கள் . கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் தீர்மானத்தை வேண்டாம் என்றார்கள். அதையும் ஏற்கவில்லை. பதித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத் தேவைகள் புறக்கணிக்கப்பட காரணம் என்ன? மாற்றாந்தாய் மனப்பான்மையா? பின்புல அரசியல் புரியவில்லை.

    பதிலளிநீக்கு