ஒரு படைப்பாளிக்குக் கிடைத்த தேசிய நல்லாசிரியர் விருது!

இந்தவார மகிழ்ச்சி 

கவிஞர் தங்கம் மூர்த்திக்கு தேசிய விருது!
     ஆசிரியர்கள் படைப்பாளிகளாக இருக்கவேண்டும், தேர்ந்த கற்பனைத் திறனோடு கலை-இலக்கியத் தன்மையோடு கற்பித்தல் நடைபெற வேண்டும்  என்பது எனது நீண்ட நாள் கனவு, ஆசிரியர் தகுதித்தேர்வில் அறிவுத்திறனை மட்டுமே அளவீடாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்வது சரியல்ல என்றும் நீண்டநாளாகச் சொல்லிவருகிறேன். படைப்பாளிகளின் கற்பனையும் குழந்தைகளின் கற்பனையும் ஒன்று சேரும் இடத்தில், கற்றல்-கற்பித்தல் எனும் வேறுபாடின்றி பகிர்தல் எனும் உயர்வான விஷயம் நடக்கும்.
      அதுதான் உயர்வான கல்விக்கூடம்.
      அப்படி ஒரு படைப்பாளி ஆசிரியராகக் கிடைப்பது அரிதிலும் அரிது.
      அப்படி ஒரு படைப்பாளிக்கு அரசு விருதுகள் கிடைப்பது அரிதோ அரிதுதான்!
                ஏற்கெனவே தமிழ்நாடு மாநில அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதைப் பெற்றிருக்கும் திரு தங்கம் மூர்த்திக்கு, நமது இந்திய அரசு –தேசிய நல்லாசிரியர்க்கான – டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, நமது இந்தியக் குடியரசுத் தலைவரால் கடந்த 05-09-2013 அன்று வழங்கப்பெற்றுள்ளதைத் தெரிவிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையருகில் திருக்கோகர்ணம்-திருவப்பூர் செல்லும் சாலையில், புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலருகில், கல்விக்கோவிலாயத் திகழும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர். (இம்முறை விருதுபெற்ற 22பேர்அடங்கிய தமிழ்நாட்டுக் குழுவில் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து இவர்மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது)
      இவரது படைப்புகள் – கடந்த ஆண்டுகளில் பத்தாம்வகுப்பு மற்றும் 12ஆம்  வகுப்பு அரசுத் தேர்வுகளில் நூறு சதவீத வெற்றி மட்டுமல்ல முதல் மதிப்பெண்களும் மிக நல்ல மதிப்பெண்களில் பெற்ற மாணவர்கள் இவரது முத்தாய்ப்பான படைப்புகள்.
 தங்கம் மூர்த்தி எழுதிய நூல்கள் –
1.முதலில் பூத்த ரோஜா (அய்க்கூத் தொகுப்பு- மூன்றாம் பதிப்பு-2012),
2.தங்கம் மூர்த்தி கவிதைகள் (இரண்டாம் பதிப்பு -2012),
3.பொய்யெனப் பெய்யும் மழை (இரண்டாம் பதிப்பு-2012),
4.கவிதையில் நனைந்த காற்று (கவியரங்கக் கவிதைகள்),
5எனது பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து (புதுக்கவிதைகள்)
6. மழையின் கையெழுத்து (படங்களுடன் அய்க்கூ கவிதைகள்) மற்றும்
7கவிதை வெளியினிலே(கவிஞர்பாலாகட்டுரைகள் பதிப்பாசிரியர்)
8.கல்வி கரையில  (கல்வி பற்றிய தமிழ்க்கவிதைகளின் தொகுப்பு)
ஆகிய அருமையான தமிழ் நூல்களின் ஆசிரியர்,
நல்ல ஆங்கில ஆசிரியர்
நல்ல கல்விநிறுவனத்தின் தாளாளர் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவது
உண்மையைச் சொன்னால்,
சிவாஜிகணேசனுக்கு சிறந்த நடிப்புக்காக  விருது தருவது போலத்தான். (அரசு விருதுகள் பற்றி இன்னும் மிஞ்சியிருக்கும் மரியாதைக்கு இதுபோலத் தகுதியானவர்க்கு அவ்வப்போது தரப்படுவதுதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து)
தங்கம் மூர்த்தி இன்னும் பலப்பல சிறப்புகளைப் பெறுவார்.
படிப்பும், உழைப்பும், படைப்புமாய்த் தொடரும் இவர் இன்னும் பல சிகரங்களை வெல்ல எனது இதய பூர்வமான நல்வாழ்த்துகள்.
வாழ்க வளர்க என வாழ்த்துவோம்.
அவரது செல்பேசி எண் – 94431 26025  
------------------------------------------------
இந்தவாரம்... வலைப்பக்க அறிமுகங்கள் --
(வலைப்பக்கம் வைத்திருக்கும் தம்பதியினர்
அவர்களை இணைத்தே அறிமுகம் செய்வதுதானே சரியானது?) –
வித்தியாசமான ஆசிரியத் தம்பதியினர்
இருவருமே ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள்
இருவருமே வலைப்பக்கம் வைத்திருக்கிறார்கள்
கணவர், உலகின் அனைத்து அரிய விஷயங்களைப் பற்றியும் இருமொழிகளில் தந்து கலக்குகிறார், உலக சினிமாவிலிருந்து உள்ளுர்க் கல்வி வரை.
கணவரின் வலைத்தளம் பார்க்க –
அடுத்தவர் அவரது துணைவியார் -
வயதை மீறிய முதிர்ச்சி காட்டும் வார்த்தைகள். ஆழமும், மிகையின்றி செதுக்கப்பட்ட சொல்லழகும் இவரது கவிதைகளின் தனிச்சிறப்பு.
இவர் அதிகமாக எழுதுவதில்லையே என்பது மட்டுமல்ல, இந்தக் கவிதைகளை இன்னும் அதிகம்பேர் பார்க்கவில்லையே என்பதும் எனது ரெட்டை ஆதங்கம்.
நீங்களும் பார்த்து அவருக்குச் சரியான விமர்சனங்களை அனுப்புவது ஒரு நல்ல கவிஞரை மேலும் மெருகேற்ற உதவும் என்பது எனது வேண்டுகோள்.
அவரது வலைப்பக்கம் பார்க்க –
-----------------------------------
இந்தவாரம்... இசைக்குறுந்தகடு அறிமுகம் -
பட்டுக்கோட்டையாரின் திரைஇசைக் காவியம் - பட்டுக்கோட்டையாரின் 107பாடல்களைக் கொண்ட இசைக்குறுந்தகடுகள்! (ஆடியோ சி.டி. ஐந்து)
பட்டுக்கோட்டையாரின் பாடல்களைத் தமிழர்களுக்கு நான் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அப்படி நான் செய்யப்போனால், பொன்னியின் செல்வன் நாவல் முன்னுரையில் ராஜாஜி சொன்னதுபோல, சூரியனுக்கு எண்ணெயும திரியும் போட முயல்வதாகவே ஆகும். எனவே நான் அந்த வேலையைச் செய்யப்போவதில்லை.
ஆனால், மகிழ்ச்சியோடு ஒன்றைச சொல்வதில் பெருமைப் படுகிறேன்.
பட்டுக்கோட்டையாரின் 107பாடல்களைக் கொண்ட இசைக்குறுந்தகடு (ஆடியோ சி.டி.) கிடைத்திருக்கிறது. இது எந்தக் குறுந்தகட்டிலிருந்தும் பிரதியெடுத்ததல்ல என்பது, அழகான அட்டைப்பெட்டி, உள்ளே ஒவ்வொரு குறுந்தகட்டிலும் எந்த எந்தப் பாடல எந்த எந்தப் படத்தில் இடம்பெற்றது என்பதற்கான குறிப்புத் தாள்களோடு இருப்பதிலிருந்தே அறியலாம். நகலெடுத்துக் காசு பார்ப்பவர்களுக்கு இதற்கான நேரமோ, நோக்கமோ இருக்காது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. மக்கள்கவிஞரின் பாடல்களை அடுத்த தலைமுறையிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று உண்மையாக விரும்பும் அன்பு மட்டுமே இந்தப் பணியில் பாராட்டுக்குரியதாக எனக்குப் படுகிறது
187பாடல்கள் எழுதியதாக அறிந்தாலும், அவை பற்பல நூல்களாகக் கிடைத்தாலும், அவருடைய அற்புதவரிகள் பலவற்றுக்கு இசை தெரியாமல் தடுமாறிய அனுபவம் தமிழர்கள் -அதிலும் திரையிசை அன்பர்கள்- பலருக்கு நேர்நதிருக்கலாம். எனக்கு நேர்நதிருக்கிறது. பலரிடமும சில பாடல்களைச் சொல்லி அதற்கான திரையிசையைக் கேட்டுப் பார்த்தும் உரிய பதில் கிடைக்காமல், சில வரிகளுக்கு நானாகவே இசையைப் போட்டு மேடையில் பாடிய அனுபவமும் எனக்கு உண்டு.
(உ-ம்-  மனைவியை இழந்தவன் கிழவனே யானாலும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமை உண்டு!- இளம்
மங்கையை மணப்பதுண்டு மண்டை வறண்டு!
  கணவனை இழந்தவள் கட்டழகி யானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமை உண்டு!- இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு – எனும் அரிய பாடல்.
திரையிசையில் நல்ல அறிவுபடைத்தவர்களிடம் கேட்டும கிடைக்காத பதில் இப்போது குறுந்தகடாகவே கிடைத்திருக்கிறது.
குறுந்தகடு 1 – பாடல்கள் 23
குறுந்தகடு 2 – பாடல்கள் 21
குறுந்தகடு 3 – பாடல்கள் 23
குறுந்தகடு 4 – பாடல்கள் 20
குறுந்தகடு 5 – பாடல்கள் 20  -- ஆகமொத்தம் 107 பாடல்கள்.
இவற்றை–அவ்வப்போது-
வலைப்பக்கத்தில் ஏற்றலாம் என்று நினைத்திருக்கிறேன்.  
சிங்கப்பூரில் இருக்கும் நமது வலைப்பக்க நண்பர்கள், இதை வெளியிட்டிருக்கும நண்பர்களின தொடர்பு கிடைத்தால் இப்படிச செய்வது தவறல்லவே என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
விக்கிபீடியா அல்லது மதுரைத்திட்ட நண்பர்கள் கேட்டுக்கொள்வது போல, இதை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றே நானும் வேண்டுகிறேன்.
பட்டுக்கோட்டையாரின் திரைஇசைக் காவியம்
இசைக்குறுந்தகடுகள் (ஐந்து குறுந்தகடுகளைக் கொண்ட ஒரு தாள்பெட்டி Paper Pack)
வெளியிட்டிருப்பவர்கள் –
மக்கள் கவிஞர் கலைவிழாக்குழு, சிங்கப்பூர்.
இதில் இந்த விவரம் தவிர யார்முகவரியும் இல்லை, இவற்றுக்கான திரைக்காட்சி கிடைக்குமானால் இன்னும் நன்றாக இருக்கும், கிடைக்கும் காட்சிகளையும் ஏற்றலாம்

--------------------------------------- 

8 கருத்துகள்:

  1. தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    புதிய தளத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மாணவர்களைப் படிப்பாளியாக மட்டும் ஆக்காமல் படைப்பாளியாய் ஆசிரியர்கள் மாற்ற வேண்டும் என்பதே எனது கருத்தும். அதற்காக பாடுபடும் தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு விருது கொடுத்தது மகிழ்ச்சி. தம்பதியர்கள் இருவரின் வலைப்பக்கங்களையும் தங்கள் வலைப்பக்கம் மூலம் அறிந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி. மக்கள் கவிஞர் கலைக்குழுக்கும் செய்தியைப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

  3. கவிஞர் தங்கம் மூர்த்திக்குத் தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தமைக்குப் பாராட்டுக்கள். இது போன்ற தகுதிசால் நல்லோர்களை விடாமல் இனம்காட்டும் தங்களுக்கும் பாராட்டு. – இமயத்தலைவன் (கவிஞர் இராய. செல்லப்பா), செனையிலிருந்து.

    பதிலளிநீக்கு
  4. தகுதியறிந்து தங்கம் மூர்த்தி
    பெற்ற விருதுக்குப் பாராட்டுத் தெரிவித்த திண்டுக்கல் தனபாலன், அ.பாண்டியன், அய்யா செல்லப்பா யாகசாமி ஆகிய நண்பர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //ஆசிரியர் தகுதித்தேர்வில் அறிவுத்திறனை மட்டுமே அளவீடாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்வது சரியல்ல என்றும் நீண்டநாளாகச் சொல்லிவருகிறேன்//
    மிகச் சரியான கருத்து. அதிக அறிவு பெற்றிருந்தால் மட்டும் சிறந்த ஆசிரியர் ஆகி விட முடியாது. சமயத்தில் அவை சிறப்பான கற்பித்தலுக்கு தடையாக அமைவதை நான் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நண்பர் த்ங்கம் மூர்த்தி க்கு பாராட்டுக்கள். நான் நேரிலும் தெரிவித்து விட்டேன். பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்து வருகிறோம். தாங்கள் அவசியம் கலந்து கொண்டு உரை ஆற்ற வேண்டும் என்பது என் + தலைவர் எஸ். இளங்கோ ஆசை. வருவீர்கள் என்று நம்பி.... அழைப்பும் தயார் ஆகிறது.முகநூலில் பாருங்கள். நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  7. முத்துநிலவன் அய்யா,

    மத்திய அரசு விருதாச்சே நேர்மையாகவே??!! வழங்கியிருப்பார்கள், எனவே சந்தேகமே வேண்டாம், வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  8. விருதால் சிலருக்கு புகழ்.இவருக்கு கிடைத்ததால் விருதுக்கே புகழ்.

    பதிலளிநீக்கு