காதலும் காமமும் - என் ஒப்பீடு.

இன்று26-06-2013, சற்றுமுன், இரவு 10.30 மணியளவில், விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த –முந்திய “கனாக் காணும் காலங்கள்“-“கல்லூரி வாசல் என்னும் தொடர்களின் தொடர்ச்சியாக இப்போது வந்துகொண்டிருக்கும்- “ஆஃபீஸ்“எனும் நெடுந்தொடரைப் பார்த்துக்கொண்டே நானும் என்மனைவியும் சாப்பிட்டோம்.
அதில்வரும் நாயகன் கார்த்திக், இரவு தன்காதலியுடன் தொலைபேசியில் பேசியதும், அதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் அத்தை சண்டை பிடித்திருப்பாள் என்பதையும், காலையில் சாப்பிடாமலே வந்திருப்பாள் என்பதையும் யூகித்து, கையில் சாண்ட்விச்-உடன் வந்து பேசிக்கொண்டிருந்த காட்சி மனசில் ஒட்டிக்கொண்டது. 
இருவரின் இயல்பான நடிப்பு மட்டுமல்லாமல், உண்மையான காதலர்களின் மனஉணர்வை அளவாக வெளிப்படுத்திய-இயல்பான- வசனமும் அதற்குக்காரணம் என்று தோன்றியது.
சில நல்ல காதல் படக்காட்சிகள் மனத்திரையில் ஓடின...
காதல்தான் எவ்வளவு உன்னதமானது!
காதலிப்பதுதான் எவ்வளவு இனிமையானது!
அதைவிடவும் இனிமையானது உண்டா என்று கேட்டால், உண்டு! அது, காதலிப்பவரால் தானும் காதலிக்கப்படுவது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
வள்ளுவன், மலரினும் மெல்லிது காமம்என்றது, காமத்தை அல்ல, உண்மையான காதலை! அவன் காலத்தில் காமத்திற்கே காதல் என்றுதான் பொருள் போல, மூன்றாவது பால் காமத்துப் பால்! அடப் பாவிகளே! எங்கள் காலத்தில் காதலையே காமமாக மாற்றிய பாவிகளே! உங்களுக்கு காமத்தாலேயே அழிவுவரும்.  
காதல்தான் தன்னை இழந்து தன் துணைக்குத் துணையாக இருக்கச் செய்யும்.
காமம் தன்னை முன்னிறுத்தி, தனக்கான சுகத்தை மட்டுமே நினைக்கச் செய்யும்

காதலில் நம் நினைவே நமக்கு இருக்காது!
காமத்தில் தன் நினைவு மட்டும்தான் இருக்கும்!

காதலில் பின்விளைவுகளை எண்ணி 
எச்சரிக்கையாக இருக்கத் தோன்றாது - உண்மையாக இருப்பதால்.
காமம் பின்விளைவுகளை எண்ணி 
எச்சரிக்கையோடு இருக்கத் தூண்டும் – பொய்யாக இருப்பதால்.

காதல், தொடர்புடைய இருவரோடு சேர்ந்து
எல்லாவற்றையும் ஜெயிக்க வைக்கும்.
காமம் எப்படியும் தொடர்புடையவரில் 
ஒருவரையாவது தோற்கடிக்காமல் விடாது.

காதல் நின்று வெல்லும்.
காமம் அப்போதில்லாவிட்டாலும் 
அடுத்தடுத்துக் கொல்லும்.

காதல் ஜெயித்தால், 
இருவருக்கும் மிஞ்சுவது மகிழ்ச்சி, 
தோற்றால் அதுவே சரித்திரமாகும்.
காமம், ஜெயித்தாலும் தோற்றாலும் 
இருவருக்கும் மிஞ்சுவது மறதிமட்டுமே!

காதலில் சதையும் இடம்பெறும், 
இதயமே முதலிடம் பெறும்.
காமத்தில் சதையே பிரதானம், 
இதயமா?  அப்படின்னா? எனும்.

என்மனைவியை –இந்த 58வயதில்- இப்போதுதான் நான் அதிகமாகக் காதலிக்கிறேன் என்று தோன்றியது. ஆனால், பாரதிதாசனின் “குடும்பவிளக்கு“ நாயகர்களைப் போல எங்களுக்கு இன்னும் “சருகுபோல் உடம்பு“ ஆகாவிட்டாலும், “அருகருகு இருவர் மிக்க அன்புண்டு செயலே இல்லை”  என்பதும்கூட முழு உண்மையில்லை. ஆகா! இப்போதுதான் நான் என் மனைவியை அதிகமாகக் காதலிக்கிறேன் என்பது உண்மைதான்!
இளைய நண்பர்களே! யாரையாவது காதலியுங்கள், காதலிக்கப் படுங்கள். தோற்றால் அந்த முள்குத்திய “சோக சுகத்தோடுவாழ்நாள் முழுவதும் அதை நினைத்துக்கொண்டே வாழுங்கள்...
தொழுவது சுகமா, வண்ணத்
      தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும்
      விருந்துதான் சுகமா? இல்லை!
பழகிய காதல் எண்ணிப்
      பள்ளியில விழுந்து, நித்தம்
அழுவதே சுகம் என்  பேன்,யான்!
                        அறிந்தவர் அறிவா ராக!
இந்தக் கடைசி  இரண்டுவரியில்தான் கண்ணதாசன் கவியரசாகிறான்... இல்ல?!?!?!
உணர்ந்தவர் உணர்வாராக...!   
பி.கு(1) நேற்று முன்தினம் 24-06, கண்ணதாசன் பிறந்தநாள்!
பி.கு.(2) நாங்களும் எங்கள் மகன் மற்றும் மகள் இருவருக்குமே சாதிமறுப்ப, சடங்கு மறுப்பு முக்கியமாக அவரவர் விரும்பிக் காதலித்தவர்க்கே மணமுடித்து வைத்தோம். இப்ப நல்லாவும் மகிழ்ச்சியாவும் தலா இரண்டு குழந்தைகளோடும் இருக்காங்க..நல்லா இருக்கணும், அவுங்க காதல் உண்மையா இருந்தா நிச்சயம் நல்லாவே இருப்பாங்க. வாழ்க.
----------------------------------------------------------------

5 கருத்துகள்:

  1. அய்யா! அண்ணா! எப்படி அழைப்பது இரண்டுமே பொருத்தம்தான்.நலமா?
    உங்கள் வலைப்பதிவைக் கண்டேன்.மகிழ்ந்தேன்.
    காதல் காமம் ஒற்றுமை வேற்றுமை பொருத்துக. ஐந்து மதிப்பெண் வினாவிடை போல நல்லாதான் இருக்கு.காதலை மட்டும் பிரித்து காமத்தை விலக்கி அதை இரண்டாம் மூன்றாம் படிநிலையில் வைப்பது இலக்கியத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்.காதல் காமம் இரண்டும் பிரிந்து இருப்பதைவிட சேர்ந்து இருப்பது ஒன்றை ஒன்று உயர்வாக்கும் உறுதிப்படுத்தும் என்றே எண்ணுகிறேன்.காதலைவிட காமம் காலத்தால் முந்தியது.காதலைவிட காமமே உயிர் இயற்கை ஆக இருந்தது என்பது பரிணாமம் சொல்லும் பாடம்.எது கீழ்படிக்கட்டு எது மேல் படிக்கட்டு என்பதில் வேண்டுமானால் விவாதம் இருக்கலாம். இரண்டு படிக்கட்டிலுமே ஏறுகிறவனே சிக்கல் இல்லாமல் இருக்கிறான் என்பது என் அனுபவம்.

    சரி ..ஆபிஸ் தொடர் பார்க்கிறீர்களா! நானும் பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்க்கும் குறைந்த இரவு உணவு நேரத்தில் இத்தொடர் என்னைப்போன்ற தொ.கா வெறுப்பாளர்களையே பார்க்க வைக்கிறது. உண்மையில் மெகா தொடர்களுக்கு அடிமையாகும் மக்களின் மனநிலையை நான் அனுபவிக்கிறேன்.ஆபிஸ் தொடர் நல்ல இயல்பான உரையாடல்கள் .கல்லூரிக்கால கால குட்டி கலாட்டாக்களபோன்ற நகைச்சுவை என நச்சரிக்கும் அன்றாட வேலை முடிவில் நம்மை ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு உணர்வுகளைப் பற்றி நல்ல அலசல்...

    புரிவது சிறிது சிரமம்... இன்றைய காலம் அப்படி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அன்பு! உன் மின்னஞ்சல் பார்த்து மகிழ்ந்தேன் என்றால், எனது படைப்பைப் பற்றிய உனது கருத்தைப் பார்த்து மிக மகிழ்ந்தேன். உண்மைதான், காதலைவிட காமம் சீனியர்தான். ஆனால், நாகரிகப்படுத்தியதில் காதலுக்குத்தானே பெருமை! என்றாலும் உன் கருத்தை நான் மறுக்கவும் முடியவில்லை. எனது மற்ற படைப்புகளைப்பற்றியும் உன் கருத்துகளை எதிர்பாரக்கிறேன்... குறிப்பாக “ஆசிரியர் உமா..”, ”நல்லாசிரியர்”, மற்றும் ஜெயகாந்தன்... எழுதுவாயா? உனது தனி மின்னஞ்சலையும் எனது அலைபேசிக்கு அனுப்பு வீட்டினர்க்கு என் அன்பு- தனபால் சார் நன்றி... அன்புடன்,
    நா.மு.9443193293

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் தாங்களின் கவிதையை கண்டு நெகிழ்ந்து விட்டது என் இதயம் அருமை..எனக்கும் ஒரு ஆசை என் கவிதை ஒன்றினைப் பற்றி சொல்ல பாரீஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்க்கு பின் எழுதியது கடைசி வரி மட்டும் இங்கே பதிவு செய்கிறேன் நீ மார்பகம் திறந்த விசயம் இன்று தான் தெரிந்தது .
    இரா.ராஜன்
    சிவகாசி

    பதிலளிநீக்கு
  5. கண்ணதாசன் படம்
    கண்ணில் குடியிருக்க
    கருத்துள்ள பதிவு படிக்க
    "காதலில் நம் நினைவே நமக்கு இருக்காது!
    காமத்தில் தன் நினைவு மட்டும்தான் இருக்கும்!" என்ற
    அடிகளுக்கான பொருளறிய
    தங்கள் பதிவு என்னை ஈர்த்ததே!

    பதிலளிநீக்கு